பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298


மாற்றி அழியாவியல்பினதாய அருளுடம்பினைப்பெற்று உலகமக்கள் நெடுங்காலம் இவ்வுலகில் நிலைபெற்று வாழ்தல் வேண்டும் என்னும் ஆராத் பெருவேட்கையுடன் இறைவனைப் போற்றிய அருளாளர் இராமலிங்க அடிகளாவார்.

நாம் பெற்றுள்ள பூதஉடம்பு அழியும் தன்மைய தாதலின் அதனை மாற்றி அன்பும், அருளும், இன்பும் உருவாகிய தூய நல்லுடம்பினை இறைவனருளால் பெற்று இவ்வுலகமுள்ளளவும் இறைவனை அன்பினால் போற்றி ஆருயிர்கட்கெல்லாம் அன்பு செய்தலே இறைவனது திருவருளாற் கிடைத்தற்குரிய திருவருள் வாழ்வாகும்.

இங்ஙனம் பொல்லாப் புலாலுடம்பின் பசுகரணங் களையெல்லாம், பதிகரணங்களாக மாற்றி இறைவன் எழுந்தருளியமையால் பல்லுயிர்க்கும் அருள் சுரப்பதாகிய அன்புடைய அடியார்களது தூய உடம்பின் நிலை பேற்றினையே அருட்பிரகாச வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு எனக் குறித்தருளுகின்றார் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

மரணமிலாப் பெருவாழ்வாகிய இக்குறிக்கேளினை வற்புறுத்தும் நோக்குடனேயே சன்மார்க்க,நெறிநிற்போரது நல்லுடம்பினைத் தீயிலிட்டெரிக்காமல் சமாதி செய்யும் முறையினை வள்ளலார் வற்புறுத்தியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும்.

மக்கள் இறந்தவழி அவர்தம் உடம்பினைப் புதைத்தலும் எரித்தலும் ஆகிய இருவகை ஈமச்சடங்கு முறைகளும் சங்ககாலத் தமிழ்கத்தில் இருந்தன. இறந்தோர் உடலைப் பள்ளமாகிய இடங்களில் புதைத்தலும்