பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

299


அறனாற்றி மூத்த அறிவுடைய பெரியோர்கள், அரசர்கள், போரில் வெற்றிவிளைத்த தறுகண் மறவர்கள் ஆகியோர் உடம்பினை வேட்கோவரால் வனையப்பட்ட பெருஞ் சால்களாகிய தாழியினாற் கவித்து முடிச் சமாதி செய்தலும் அக்கால வழக்கமாயிருந்தன. இச்செய்தி,

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
... ... ... ... ...
கொடிநுடங்கு யானை நெடுமாவளவன்
தேவருலகம் எய்தினனாகலின்
அன்னோற்கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை யாயின் எனையதூஉம்
இருநிலந் திகிரியாப் பெருமலை
மண்ணாவனைதல் ஒல்லுமா நினக்கே

(புறம்-228)

எனவும்,

ஈமத்தாழி அகலிதாக வனைமோ
(௸-256)

எனவும் வரும் புறநானூற்றுப் பாடல்களால் இனிது விளங்கும். இவ்வாறு மக்களது உயிர் நீங்கிய உடம்பினை உள்ளே வைத்து மூடுதற்குரிய சால்கள் முதுமக்கள் தாழி என வழங்கப் பெற்றன. இத்தகைய தாழிகள் தென்னாட்டிற் பலவிடங்களிற் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. தமிழ் முன்னோர்கள் இறந்தோர் உடம்பினைச் சுட்டெரித்தலின்றித் தாழியில் வைத்துப் புதைக்கும் பழக்கத்தினையும் கொண்டிருந்தார்கள் என்பது புதைபொருளாய்வினால் நன்கு புலனாகும்.

துறவிகளாகிய தவச் செல்வர்கள் இறந்த நிலையில் அவர்தம் உடம்பினைச் சமாதியில் வைத்து வழிபட்டுப்