பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309


மொழிக்கும் அப்பாற்பட்டு நின்ற இறைவனது புகழ்த் திறங்கள் தேவார ஆசிரியர் மூவர் அருளிய திருப்பதிகங் களுக்கு இசைந்தனவாய் முதிர்தீம்பாலும் முக்கனியும் வானோர் அமுதமும் நல்ல தேனும் கைப்புடையன என்று சொல்லும் வண்ணம் மிக்க இனிப்புடையனவாய் விளங்குவன என்பதனையும், வடிக்குறும் தமிழ்த் தொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே (876) எனவும் தண்டமிழ்க் கவிதைபோல் சாந்தமிக்கது (குடும்பகோஷம் 19) எனவும் மூவர் திருப்பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே (908) எனவும், பண்ணாரும் மூவர் சொற் பாவேறு கேள்வியிற் பண்படா ஏழையின் சொற் பாவையும் இகழ்ந்திடாது ஏற்று (2605) எனவும் வரும் தொடர்களில் குறித்துப் போற்றியுள்ளமை தமிழ்ச் சுவையில் வள்ளலார் கொண்ட ஈடுபாட்டினை நன்கு புலப்படுத்துவனவாகும்.

சிற்சபையில் நடிக்கின்ற இறைவனது திருக்கூத்து இயல், இசை, நாடகம் என்னும் மும்மைத் தமிழுக்கும் ஏற்புடையதாய்ச் செந்தமிழை வளர்க்குத் திருக்கூத்தாக ஆன்மாக்களின் உள்ளம், உரை செயல் ஆகிய முக்கரணங் களையும் திருத்தி மும்மை மலம் அகன்றொழியச் செம்மை நலம் பெறச் செந்தமிழை வளர்க்கும் திருக்கூத்தாகத் திகழும் திறத்தினை,

'எந்தையுனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்
செந்தமிழில் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்'

(4802)

எனவரும் தொடரில் அருட்பிரகாசவள்ளலார் விரித்துப் போற்றியுள்ளமை தமிழ்மொழியிடத்து வள்ளலார் கொண்டுள்ள பெருமதிப்பினையும் பேரார்வத்தினையும் நன்கு விளக்குதல் காணலாம்.