பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311


மொழியே என்னும் உண்மையினை நன்குபுலப்படுத்தல் காணலாம்.

உண்மையும் தெளிவும் வாய்ந்த மொழி தமிழ்மொழி என்பதும், அம்மொழியொன்றே எல்லாம் வல்ல பரம் பொருளின் உண்மை இயல்பினை உள்ளவாறு புலப்படுத்தும் என்பதும்,'தெய்வச் சுருதி தமிழ்க் கன்றித் தீட்டா நிலமைத்து' எனவரும் ஆன்றோர்வாய் மொழியால் நன்கு துணியப்படும்.

சைவசமய ஆசிரியர் நால்வரும் செம்பொருளாகிய சிவபரம்பொருளைப் பாடிப் போற்றிய செந்தமிழ்த் திருப்பாடல்களை இடைவிடாது ஓதி நெஞ்சம் கனிந்து உருகும் பேரின்ப அநுபவத்தினைப் பெற்ற இராமலிங்க வள்ளலார், சைவசமயகுரவர்கள் நால்வரும் செய்த தமிழ்ப் பாடல்கள், உலகவின்பத்திலேயே ஊறிக் கிடக்கும் காமுகர்களைக்கூடத் தம்பால் ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தன என்னும் உண்மையை, -

சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் கீர்த்தியைச் சேர்த்தியந்த
நால்வரும் செய்தமிழ் கேட்டுப்புறத்தில் நடக்கச் சற்றே
கால்வரு மாயினும் இன்புருவாகிக் கனிமனம் அப்
பால் வருமோ அதன்பாற் பெண்களை விட்டுப் பார்க்கினுமே

(2332)

என இறைவனை முன்னிலைப் படுத்திப் போற்றும் பாடலில் அருட்பிரகாச வள்ளலார் தமது கற்பனைத் திறம் விளங்க வெளியிட்டுள்ளமை அவர்தம் தமிழ் ஆர்வத்தை இனிது புலப்படுத்துவதாகும்.