பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312


அருட்பிரகாசவள்ளலார் தம் பாடலிற் பயன்படுத்திய மொழிநடை கற்றோர், கல்லாதோர், ஆகிய எல்லாரும் புரிந்து கொள்ளுதற்குரிய எளிமையும் இனிமையும் ஒருங்கு அமையப் பெற்றதாகும்.

உலகவழக்கில் மக்களால் பேசப்படு ம் மொழி நடையினை அவ்வாறே செய்யுளாக யாத்தமைக்கும் யாப்பின் திறம் அருட்பிரகாச வள்ளலார்க்கு இயல்பாகவே கைவந்த கலைத்திறமாகும்.

மக்களுக்குப் புரியாத சொற்களை வலிந்து சேர்த்து அரிதுணர் பொருளனவாய்ச் செய்யுட்களைப்பாடும் ஏனைய புலவர்களைப் போலன்றி, உலகில் இயல்பாக வழங்கும் மொழிநடையினைச் சீரும், தொடையும் சிறக்க, தன்மை, உவமை, உருவகம் முதலிய அணிநலன்கள் அமைய இயல்பாகவே பாடலியற்றும் பாவன்மையினை இறைவன் திருவருளால் பெற்ற அருட்பாவலர் இராமலிங்கவள்ளலார் ஆவர். அவர்கள் பாடிய பாடல்களில் மோனை, எதுகை, முரண், இயைபு, முதலிய தொடை நயங்களும் சொல்லும் பொருளும் பற்றிய அணிநயங்களும் இயல்பாகவே அமைந்துள்ளன, என்பது திருவருட்பாப் பனுவல்களைப் படித்து மகிழும் அன்பர்கள் அனைவர்க்கும் தெரிந்த செய்தியாகும்.

வள்ளலார் அருளிய பாடல்களில் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என்னும் நால்வகைப் பாக்களும் தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்களும், வண்ணம், சந்தம் பற்றிய யாப்பு வகைகளும், கண்ணி, கும்மி, சிந்து, கீர்த்தனம், நாமாவளி, முதலிய இன்னிசைப் பாடல்களும், தலைவியும் தோழியும் உறழ்ந்து கூறுவனவாகவும், தலைவனும் தலைவியும்