பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317

 பாடல்களில் பல இடங்களிலும் குறித்துள்ளமை, காணலாம். இவ்விருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கந்தவேள் அருள் பெற்றுச் செந்தமிழ்ப்பனுவல் பாடிய தவப்பெருஞ் செல்வராகிய பாம்பன் குமரகுருதாக சுவாமிகள், வள்ளலார் அறிவுறுத்திய மரணமிலாப் பெரு வாழ்வினை முருகப்பெருமான் தன் அடியார்கட்கு வழங்கி யருள்வான் என்பதனை,

நின் மலச் செஞ்சோதி வடிவுடையவுனை
யனவரத நினைப்போர்க் கென்றும்
பொன்மயச் செம்மேனி யுடம்புண்டாகு
நரை திரைகள் பொருந்தா புன்கண்
தன்னுரத்தி னுயிர்கொள் கூற்றமணு
காதெதினுஞ் சத்தாய் நிற்குஞ்
சின்மயத்தின் தெருட் பிழம்பே யான் றொழுமோர்
வேற்சமர்த்தா சிவச் சீர்க்குன்றே.

(பாம்பன் சுவாமிகள்)

என வரும் பாடலில் தொகுத்துக் கூறியுள்ளார். வள்ளலார் செந்தமிழ்ப் பொருள் நலத்தில் பாம்பனடிகளார் கொண்டுள்ள பெரு மதிப்பினையும் பேரார்வத்தையும் இது நன்கு புலப்படுத்துவதாகும்.

இவ்வுலகில் உயிர்கள்படும் துன்பத்தினைக் கண்டு உளம் பொறாது அவற்றின் துன்பத்தினைத் துடைக்க முற்படும் உயிரிரக்க உணர்வே தம் வடிவாகக் கொண்டு நெஞ்சம் நெக்குருகி மன்னுயிர்களின் துயரங்களைத் துடைத்தருளல் வேண்டும் என நெஞ்சத்தினை நெகிழ்விக்கும் செந்தமிழ்ப் பனுவல்களால் எல்லாம் வல்ல இறைவன்பால் இடைவிடாது முறையிட்டு வேண்டிய அருளாளர் இராமலிங்க அடிகளாராவார். தம் துயர் தீர்த்தருள்க - என வேண்டும் தன்னலமின்றி மன்னுயர்