பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320


கொள்கைகளை எல்லோரும் புரிந்து மேற்கொள்ளும் முறையில் இனிமையும், எளிமையும், தெளிவும் வாய்ந்த செந்தமிழ்ப் பாடல்களாலும், தெளிந்த உரைநடையாலும் வெளியிட்டு வந்தார்கள். வள்ளலார் அருளிய பாடல்கள் யாவும் நம் நாட்டில் கற்றோர், கல்லாதாராகிய எல்லா மக்களும் இறைவன் திருமுன்னர் நின்று பாடிப் போற்றி மகிழற்குரிய இன்னிசைச் செழும் பாடல்களாக அமைந்துள்ளன என்பது யாவரும் அறிந்த செய்தியாகும். அத்தகைய பாடல்களில் சிலவற்றையேனும் இங்கு எடுத்துக் காட்டுதல் ஏற்புடையதாகும்.

இராமலிங்க வள்ளலார் தம் இளம்பருவத்திலேயே சென்னையில் கந்தகோட்டத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானைப் போற்றிப் பரவிய செந்தமிழ்ப்பனுவல் தெய்வமணிமாலை என்பதாகும். அதன்கண் ஒரு பாடலாக அமைந்தது, -

ஒருமையுட னினதுதிரு மலரடி நினைக்கின்ற
     உத்தமர்தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
     உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும்
     பொய்ம்மை பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
     பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவேவேண்டும் உனை
     மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதிவேண்டும் நோயற்ற
     வாழ்வில் நான் வாழவேண்டும்
தரும்மிகு சென்னையிற் கந்தகோட்டத் துள் வளர்
     தலம் ஓங்கு கந்தவேளே