பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325

 வள்ளலார் பாடிய அருள் விளக்க மாலையில் இரண்டாம் பாடலாக அமைந்தது,

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
     குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
     உகந்ததண்ணீரிடை மலர்ந்த சுகந்த மணமலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
     மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
     ஆடுகின்ற அரசேஎன் அலங்கல் அணிந்தருளே.

(4091)

என்ற பாடலாகும்.

விளையாடும் இளம் பருவத்திலேயே என்னை மணந்து கொண்ட தலைவன் நீ என்பார், ஆடையிலே எனை மணந்த மணவாளா என அழைத்தார் (ஆடையிலே - விளையாடும் பருவத்திலேயே - இளம் பருவத்திலே, ஆடையிலே என்பது உலகவழக்குச்சொல்), பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும் உணர்தற்கரிய பரம்பொருளை அம் முதல்வனது திருவருளே கண்ணாகக் கொண்டு சிந்தையிலே இடைவிடாது சிந்திக்குங்கால், அங்ஙனம் சிந்திப்போரது பிறவி வெப்பம் தணிய அவ்விறைவனது திருவடி ஞானம் தண்ணிய நிழலாய்த் தோன்றிக் குளிர்ச்சியை நல்கும் என்பர் மெய்கண்டார், (சூத்திரம் 9) இதனை நினைவு கூரும் முறையிலமைந்தது, 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே' என வரும் தொடராகும்.