பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326


வெம்மை பொறாத கோடைக்காலத்திலே வழி நடப்போருக்குக் குளிர்ந்த மரநிழலும் ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணிரும் மெல்லென வீசுகின்ற தென்றற் காற்றும் ஒரு சேர இணைந்த நிலையில் ஏற்படும் இன்பத்தினை இறைவன் அருளால் விளையும் இன்பத்திற்கு உவமையாக எடுத்துரைக்கும் முறையில் அமைந்தது இப்பாடல்,

'மாசில்வீணையும் மாலை மதியமும்
     வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
     ஈசன் எந்தை இணையடி நீழலே'

என வரும் அப்பர் தேவாரத்தின் விளக்கமாக அமைத்துள்ளமை ஒப்பு நோக்கி மகிழத்தகுவதாகும்.

உலக வாழ்க்கையில் மக்கள் விரும்பி நுகர்தற்குரிய முக்கனிகளின் சாறுகள், சர்க்கரை, கற்கண்டு, தேன், பசும்பால், தேங்காய்ப்பால், இனிய வாதுமை, முந்திரிப் பருப்பின் பொடி நல்லநெய் இவற்றையெல்லாம் கலந்து காய்ச்சிப் பதமறிந்து இறக்கிய நறும்பாகின் கட்டியைக் காட்டிலும் இன்சுவைதரும் தெள்ளிய அமுதமாகத் திகழ்வோன் கூத்தப்பெருமான் என்பதனை விரித்துரைத்துப் போற்றுவது,

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டிச்
     சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக்கலந்தே
தனித்த நறுந் தேன்பெய்து பசும்பாலுந் தெங்கின்
     தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும்விரவி
இனித்த நறுநெய்யளைந்தே இளஞ்சுட்டினிறக்கி
     எடுத்த சுவைக்கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே