பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328


யமைத்துள்ளார். இந்நூலின் சொற்பொருள் அமைப்பு அறிஞர்களால் வியந்து பாராட்டத்தகுவதாகும்.

இராமலிங்க வள்ளலார் இயற்றிய சீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல் மூன்று பிரிவுகளை உடையதாகும். சீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்பது முதற்பிரிவு ஆகும். ஆன்ம இன்ப வாழ்வு என்பது இந்நூலின் இரண்டாம் பிரிவு ஆகும். சீவ காருண்யத்தின் சொரூபம் முதலியன மூன்றாவது பிரிவு. இந்நூல் முற்றுப் பெறாதது நம் தவக் குறைவேயாகும்.

அருட்பிரகாச வள்ளலார் தம் வாழ்க்கையின் குறிக் கோளாக மேற்கொண்ட சீவகாருண்ய ஒழுக்கம் பற்றிய இவ்வுரைநடை நூல், முழுமை பெற்றிருக்குமாயின் இப்பொருள்பற்றி அடிகளார் திருவுள்ளத்தில் தோன்றிய கருத்துக்கள் அனைத்தையும் நம்மனோர் உணர்ந்து பயன் பெறுதற்கு வாய்ப்பாயிருந்திருக்கும். காழிக் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவிலொடுக்கம் என்ற நூலை இராமலிங்க வள்ளலார் பதிப்பித்துள்ளார்,

"வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்
வள்ளன் மலர்த் தாடலைமேல் வைத்துரைத்தா னுள்ளத்
தழிவிலடுக்குந்தேனை யன்பரெலா முண்ண
ஒழிவி லொடுக்கநூ லோர்ந்து"

என வரும் ஒழிவிலொடுக்கச் சிறப்புப்பாயிரப் பாடலுக்கு இராமவிங்க அடிகளார் பேருரை வரைந்துள்ளார்கள். இவ்விளக்கம் ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி"யென்ற பெயரால் வழங்கப்படுகிறது. இப்பாடலில் வள்ளல் குருராயன் என்ற பெயர்கள் திருஞான சம்பந்தப் பிள்ளையாரைக் குறித்தனவாகும்.