பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330


தென்னவனங்கனன் னீற்றாற்றிருத்திய தென்ன வின்னந்
தென்னவனங்கனங்கைச் சிலைக்கூனையும் தீர்த்தருளே.

என்றதனால், பிள்ளையார் இவ்வவதாரத்திற்கு மேனின்ற அவதாரத்தில் குமாரசற்குரு வென்பது காண்க. கல்லாடம்,

உழன்மதிற் சுட்ட தழன கைப் பெருமான்
வணங்கி நின்றேத்தக் குருமொழி வைத்தோய்
குருமணி தேற நெடுமறைவிரித்தோய்.

சித்தியார், 'அருமறை ஆகமம் அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாம் குருளை' என்பவைகளால் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்த ஆசாரியத் தலைமையை உணர்க.

என இராமலிங்க வள்ளலார் ஆளுடைய பிள்ளையாரைக் குருராயன் என்ற பெயரால் காழிக்கண்னுடைய வள்ளலார் குறித்தற்குரிய காரணத்தினை மேற்கோள் தந்து விளக்கியுள்ளார்கள். இவ்விளக்கம் இராமலிங்க வள்ளலாரது செந்தமிழ் உரைநடைத்திறத்திற்கும் பல நூல்களையும் ஒதாது உணர்ந்த புலமை நலத்திற்கும் சிறந்த இலக்கியமாகத் திகழ்தல் காணலாம்.

இராமலிங்க அடிகளார் காழிக்கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவில் ஒடுக்கத்திற்குப் பேருரை வரையத் தொடங்கியதன் காரணம் கண்ணுடைய வள்ளலார்பால் இராமலிங்க அடிகளாருக்குள்ள பேரீடு பாடேயாகும்.