பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

331


அடிகளார் பரப்ப எண்ணிய சீவகாருண்ய ஒழுக்கத்திற்கும், ஆழ்ந்த முடிவின் அனுபவ நிலைக்கும் நிலைக்களனாகத் திகழ்வன காழிக்கண்ணுடைய வள்ளலார் சிவஞான வள்ளலார் ஆகியோர் நூல்களாகும்.

இவ்வுண்மை, வள்ளலார் சாத்திரங்களில் ஒன்றாகிய ஞான விளக்கம் என்ற நூலில் சீவகாருண்ய விளக்கம் இடம் பெற்றிருத்தலாலும், உபதேச மாலை என்ற நூலில், கொல்லா விரதத்தின் இன்றியமையாமை விரித்துரைக்கப் பெறுவதாலும்,

சித்தாந்தம் வேதாந்தம் செப்புதத்து வாந்தமிசை
புத்த கலாந்தமொடு போதாந்தஞ் - சுத்தமா
நாதாந்த மென்றிலைக ளாறு நலையென்றே
மீதானந் தேடி விடு.

(வள்ளலார் சாஸ்திரம் உபதேச மாலை-40)

எனவரும் பாடலில் ஆறந்த உபதேசம் இடம் பெற்றிருத் தலாலும் நன்கு துணியப்படும்.

காழிக் கண்ணுடைய வள்ளலார் ஞானசம்பந்தப் பிள்ளையாரைக் குருவாகக்கொண்டு ஒழுகியது போலவே இராமலிங்க அடிகளாரும் ஞானசம்பந்தரைக் குருவாகக் கொண்டு வழிபட்டமையாலும் இருவர்க்கும் வள்ளல் என்ற சிறப்புப்பெயர் வழங்கிவருவதாலும், காழிக் கண்ணுடைய வள்ளலார் நூல்களுக்கும் அருட்பிரகாச வள்ளலார் திருவருட்பாவுக்கும் நெருங்கிய தொடர்பிருத்தல் வேண்டும் என எண்ணவேண்டியுள்ளது.

இராமலிங்க வள்ளலார் 'தொண்டமண்டலசதகம்' என்பதற்கு நூற்பெயர் இலக்கணமும் வழிபடுகடவுள் வணக்கப் பாட்டுரையும் வரைந்து அந்நூலைப் பதிப்பித்துள்ளமை பலரும் அறிந்த செய்தியாகும்.