பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336


ராகவும், உரையாசிரியராகவும், போதகாசிரியராகவும், ஞானாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும் விளங்கிச் செந்தமிழ் வளர்த்த பெருந்தவச் செல்வர் வடலூர் இராமலிங்க வள்ளலார் ஆவார் என்பதனை தமிழ் உலகம் நன்கு உணர்தல் வேண்டும்.

சன்மார்க்க நெறி கண்ட சான்றோராகிய இராமலிங்க வள்ளலார், பாட்டும் உரையுமாக வளர்த்த செந்தமிழ், சாதி சமய வேறுபாடற்ற நிலையில் உலக மக்கள் எல்லோரையும் ஒருகுடும்பத்தாராக அன்பினால் ஒத்து வாழும் முறையில் ஒன்றுபடுத்தும் ஆற்றல் வாய்ந்ததாகும்; சிந்தனைக்கெட்டாத சிவபரம்பொருளை நாட்டு மக்கள் உள்ளத்திலே நிலைபெறச் செய்து உலகமக்களில் ஒத்தார், உயர்ந்தார், தாழ்ந்தார் என்னும் வேறுபாடின்றி ஒருமையுணர்வினராகி உலகியலாட்சியை நடத்தும், உரிமை வாழ்வினைத் தரும் ஆற்றல் வாய்ந்ததாகும்.

சிவயோகியராகிய திருமூலநாயனார் முதல் தாயுமான அடிகள் ஈறாகத் தமிழகத்தில் வாழ்ந்த ஞானச் செல்வர்கள் அருளிய நூல்களிற் கூறப்பட்ட தத்துவ உண்மைகளும், அருள் அநுபவங்களும் ஆகியவற்றின் தெளிவாகத் திகழ்வது, வள்ளலார் வளர்த்த செந்தமிழ் எனக் கூறுதல் பொருந்தும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் எனவும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனவும், நம் தமிழ் முன்னோாகள் அறிவுறுத்திய உலக ஒருமைப்பாட்டினை மீண்டும் நிலை பெறச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது, வள்ளலார் வளர்த்த செந்தமிழே எனக் கூறுதல் பொருத்தமுடையதாகும்.