பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342


சிற்சபையில் நடம் புரியும் கூத்தப் பெருமானை அறுகம் புல்லினால் அர்ச்சித்து வழிபட்டால் இவ்வுலக வாழ்வில் உயர்ந்த பதவிகளையும் மறுமையில் வீடுபேறாகிய முத்தியினையும் பெறலாம் என அறிவுறுத்துவது,

பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில்
இகலில் இடையை இரட்டித் தகலின்
அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து

(2724)

எனவரும் வெண்பாவாகும். பகுதி, தகுதி, விகுதி என்னும் சொல் வாய்பாடுகளை முன்னே நிறுத்தி அச்சொற்களின் இடையே அமைந்த 'கு'கர எழுத்தை இரட்டியாக்கி (முவிரண்டு, ஆறு, 'கு', அறுகு, ஆக்கி) - அவ்வறுகம் புல்லினால் சிற்சபையில் ஆடல் புரியும் இறைவனைத் தகுதியுடன் அருச்சித்து வழிபட்டால் அம்மூன்று சொற்களில் முதற்கண் அமைந்த எழுத்துக்களின் சேர்க்கையாகிய 'பதவி' என்பது முதற்கண் உண்டாகும். பின்னர் அம்மூன்று சொற்களின் இறுதி எழுத்தாகிய 'தி' என்பதன் மும்மை, அஃதாவது 'முத்தி' வீடுபேறு முடிவில் உளதாகும் என்பது இப்பாடலிற் குறிக்கப்படும் குறிப்புப் பொருளாகும். பகுதி, தகுதி, விகுதி என்னும் சொற்களுள் இடையிலுள்ள 'கு' கரத்தை இரட்டியாக்குதலாவது மூன்று சொற்களின் இடையிலுள்ள 'கு'கரம் மூன்றினையும் இரட்டி ஆறு 'கு'ஆக்குதல், ஆறு-கு - அறுகு, என்றது அறுகம்புல்லினை முன் என்றது, இங்குக் குறித்த மூன்று சொற்களின் முதல் நின்ற எழுத்துக்களின் சேர்க்கையாகிய 'பதவி'யினை, கடை என்றது, அச்சொற்களின் இறுதி எழுத்தாகிய மூன்று-'தி'கரத்தினை (மூன்று தி-முத்தியினை),