பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346


ஆவி ஈர் ஐந்து-ஆன்மாவை வருத்தும் ஆணவம், கன்மம், மாயை, திரோதாயி, மாயேயம் என்னும் ஐவகை மலங்கள். அறலாம்-நீக்கிவிடலாம், ஈர்தல்-வருத்துதல். ஆவியீரைந்து ஓரிரண்டோடு ஆய்ந்து இடலாம்-பிராணனுக்குரிய கலைகள் பத்தோடு இரண்டினையும் (பன்னிரு கலைகளையும்) சேர்த்து (புறத்தே கழியாமல்-அகத்தே) கட்டிக்கொள்ளலாம் எனத் திருவைந்தெழுத்து ஒதுதலின் பயன்களை உய்த்துணர்ச் செய்யும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளமை சிந்தித்து உணரத்தகுவதாகும்.

கற்போர் தம் நுண்மான் நுழைபுலனை வளர்த்துக் கொள்ளும் முறையில் அருட்பிரகாச வள்ளலார் பாடிய அரும்பொருட் பாடல்களில் கற்றோர் அறிவுக்கும் எட்டாத நிலையில் இப்பாடலின் பொருள் இதுதான் எனத் துணிந்து கூறவியலாதவாறு அமைந்த பாடல்களும் சில உள்ளன. அவற்றையெல்லாம் நுண்ணிதின் ஆராய்ந்து பொருள்விளக்கந் தருதல் செந்தமிழ்ப் புலமையும் திருவருள் அநுபவமும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற சான்றோர்களின் தலையாய கடமையாகும்.