பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அகத்துறைப் பாடல்கள்


தொல்காப்பியப் புறத்திணையியலுள் ஏழாவதாகச் சொல்லப்படுவது பாடாண்திணை என்னும் ஒழுகலாறாகும். புலவர் பாடும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய, அறிவு திரு, ஆற்றல், ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதல் தன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். இது புலவராற் பாடப் பெறும் தலைமக்களது ஒழுக லாறாகிய பண்புடைமையினை உணர்த்தி நின்றது. போர்க்களத்தே அஞ்சாது போர்புரியும் மறவர்களின் தொழிலாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, என்பவற்றைப் பொருளாகக் கொண்டு பாடப் பெறும் அறுவகைத் திணைப்பகுதிகளும், ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் அன்பினாற் கூடிவாழும் அகத்திணை ஒழுகலாற்றைப் பொருளாகக் கொண்டு பாடப்பெறும் காமப் பகுதியும் ஆகிய இவ்வெழு வகைகளும் பாடாண் திணையின் பொருட்கூறுகளாகும். மக்களைப் பொருளாகக் கொண்டு பாடுதற்குரிய காமப்பகுதியினைக் கடவுளைப் பொருளாகக் கொண்டு பாடினும் நீக்கார். கடவுளை மக்கள் காமுற்றதாகச் செய்யுள் செய்தலும் நீக்கப்படாது என்றார் தொல்காப்பியனார். இவ்விரு வகையினையும் கடவுள் மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கம் எனவும், கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்