பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

351


என வரும் ஆளுடையபிள்ளையார் திருப்பாடலை யடியொற்றி யமைந்துள்ளமை காணலாம்.

தன் ஆருயிர் நாயகனைப் பிரிந்த நிலையில் தலைவி இரங்குவதாக அமைந்தது, முப்பத்தொரு பாடல்களால் இயன்ற 'இரங்கல் மாலை' யென்னும் பனுவலாகும். இறைவன் திருவுலா வந்ததைக் கண்ட தலைவி தன் மனம் அவனை விரைந்து சென்றடைந்தமையினை வியந்துரைப்பதாக அமைந்தது, 'திருவுலா வியப்பு' என்னும் பதிகமாகும். தலைவி தன் ஆருயிர்த்தலைவனாகிய ஒற்றியூர்ப் பெருமானுடன் அன்பினால் உரையாடிய திறத்தை வியந்துரைப்பது 'சல்லாப வியன்மொழி' என்னும் பதிகமாகும்.

வெற்றியிருந்த மழுப்படையார்
     விடையார் மேரு வில்லுடையார்
பெற்றியிருந்த மனத்தர்தமுட்
     பிறங்கும் தியாகப் பெருமானார்
சுற்றியிருந்த பெண்களெல்லாஞ்
     சொல்லி நகைக்க வருகணைந்தார்
ஒற்றியிருமென் றுரைத்தேனான்
     ஒற்றியிருந்தே னென்றாரே

(1558)

என்பது இப்பதிகத்தின் ஐந்தாம் பாடலாகும். 'வெற்றித் திறன் வாய்ந்த மழுப்படையை யுடையவரும் எருதினை ஊர்தியாகப் பெற்றவரும் மேருமலையை வில்லாக வளைத்தவருமாகி, அன்பு நிறைந்த மனமுடைய அடியார்களின் உள்ளத்தே விளங்கும் தியாகேசப் பெருமானாகிய தலைவர், என்னைச் சுற்றியிருந்த பெண்களெல்லாம் இவள் நாணமற்றவள் என்று சொல்லிச் சிரிக்க என்பக்கத்தே அணைந்தார். அதுகண்ட நான் என்னை நெருங்காது சிறிது துராத்தில் தள்ளியிருப்பீராக என்று கூறுமுறை