பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

357


முதல்வனது இயல்பினையும் அம்முதல்வனால் தான் பெற்ற அருள் அநுபவத்தினையும் நூறு திருப்பாடல்களால் எடுத்துரைக்கும் பனுவல் அநுபவமாலை யென்பதாகும். அகத்துறைப்பாடல்களாகிய இவை, ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து இன்புறும் பேரின்ப நிலையினை விளக்குமுறையில் அமைந்துள்ளன. உலகில் மன்னுயிர்கள் எல்லாம் உறங்கும் பொழுதும் தான் மட்டும் கனவிலும் நனவிலும் அருட்பெருஞ்சோதி இறைவரோடு இணைந்து இரவு பகலில்லா இன்பவெளியில் மகிழ்ந்திருக்கும் திறத்தினைத் தலைவி,எடுத்துரைப்பதாக அமைந்தது,

கண்ணுறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும்
     கனவே கண்டுள மகிழ்வேன் கனவொன்றோ நனவும்
எண் அடங்காப் பெருஞ்சோதி என் இறைவர் எனையே
     இணைந்திரவு பகல்கானா தின்புறச் செய்கின்றார்
மண் உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
     மற்றுளவெலாம் உறங்கும் மாநிலத்தே நமது
பெண் உறங்காள் எனத் தாயர் பேசி மகிழ்கின்றார்
     பெண்கள் எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ் செய்கிலரே.

(5715)

எனவரும் பாடலாகும். இது

மண் உறங்கும் விண்ணுறங்கும் மற்றுளஎல்லாம் உறங்கும்
கண்ணுறங்கேன் எம் இறைவர் காதலினாற் பைங்கிளியே

(தாயு. பைங்கிளி 44)

என வரும் தாயுமானார் பாடலை நினைவுபடுத்துவது காணலாம். என்னாற் காதலிக்கப் பெற்ற தலைவனை தனக்குவமையில்லாத இறைவன் என்பதை உணராமல் என்னை அச்சுறுத்திய தாயரெல்லாம் யான் முதல்வன்