பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

365


தான் கண்ட திருக்கூத்தின் வகைகளைத் தன்தோழிக்கு உரைத்ததாக அமைந்தது,

என்புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி
     இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
அன்புறு சித்தாந்த நடமும் வேதாந்த நடமும்
     ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
இன்பமயமா யொன்றாய் இரண்டா யொன்றிரண்டும்
     இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பேர் அந்தத்
     தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே

(5778)

என வரும் அனுபவமாலைப் பாடலாகும். இப்பாடற் பொருளை ஊன்றி நோக்குங்கால் இதனைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் வேதாந்த, சித்தாந்த, சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணத்துள் ஒருவராவர் என்பது நன்கு தெளியப்படும்.

'அம்பலத்தே ஆடல் புரியும் என் மணவாளர் காலைப் பொழுதிலே இங்கு வந்து என்னைக் கலந்து இன்பம் தர உள்ளார். எனவே என் தோழியாகிய நீ இம்மனை யகத்தே தங்காது புறத்தே செல்வாயாக என என்னை நோக்கிக் கூறுகின்றாய். உலகில் பெண்கள் தம் மகிழ்நரொடு கூடி இன்புறுதற்குரிய காலம் மாலைப்பொழுது என்பது உலகியலில் கண்ட வழக்கமாகும். நீ கூறுமாறு காலையில் கணவரொடு கலத்தலைக் கண்டிலேன். இது வியக்கத்தக்க தாயிருக்கிறது' என்று தோழியே நீ கூறாதே, நீ உலகியல் நூல் எழுதிவைத்ததை மனத்தினுட் கொண்டு தடுமாறுகின்றாய். ஆதலால் காலையிலே கணவரொடு கலத்தற்குரிய இவ்வுட்கருத்தினை அறியமாட்டாயாயினை.