பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368


பாடு காட்டாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போன்று கருதி அவ்வுயிர்களுக்கு வரும் துன்பங்களைத் துடைத்து ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவராய் மன்னுயிர்கள் அடையும் இன்பத்தைக் கண்டு மகிழ்கின்றவர்கள் யாரோ, அத்தகைய பெருமக்களுடைய உள்ளமே, தூய அறிவின்வடிவாய் எம் இறைவன் திருநடனம் புரியும் இடம் என்று நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அத்தகைய சன்மார்க்க நெறியில் நின்ற அடியார்களுடைய திருவடிகட்கு ஏவல் புரிந்திட என்னுடைய சிந்தையானது பெருவிருப்பமுடைய தாயிற்று என்பது இப்பாடலின் பொருளாகும்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய பலரும் கூடிய சன்மார்க்க சங்கத்திலே தன் ஆருயிர் நாயகனாகிய இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பது வள்ளலார் கருத்தாதல் மேற்குறித்த பாடலால் நன்கு புலனாம். 'வாயாரத்தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான்' (6-8-5) எனவரும் அப்பர் அருள் மொழி இங்கு நினைக்கத் தகுவதாகும்.

அருட்பிரகாச வள்ளலாராகிய நாயகி, தன் ஆருயிர்த் தலைவனாகிய சிவபரம் பொருளோடு ஒன்றிச் சுத்தசிவ சாக்கிரம், சுத்த சிவ சொப்பனம், சுத்த சிவ சுழுத்தி, சுத்த சிவதுரியம், சுத்தசிவ துரியாதீதம் (தூய சிவ நனவு, தூய சிவ கனவு, தூய சிவ உறக்கம், தூயசிவ பேருறக்கம், தூய சிவ உயிர்ப்படக்கம்) என்னும் ஐவகை நிலைகளிலும் சிவமயமாய்க் கலந்து நிறைந்த பேரின்ப நிலையினைப் பெற்று மகிழ்ந்திருக்கின்ற தன்மையினை,

தனிப்படுமோர் சுத்தசிவசாக்கிர நல்நிலையில்
     தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்