பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுதந்தரம் பெற வழி வகுத்த தோன்றல்

உலகியல் வாழ்வில் பிறருடைய அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டுத் தமது உரிமையினை இழந்து வாழ்தலை அறிவும் ஆற்றலும் பொருளும் வாய்க்கப் பெற்ற மாந்தர் ஒரு பொழுதும் விரும்பமாட்டார்கள். தாம் பிறந்த நாட்டில் தாம் தம் விருப்பப்படி சென்று உலவுதற்கும் தம் தகுதிக் கேற்ற தொழில்களைச் செய்து பொருளீட்டித் தத்தமக்குரிய இடங்களில் தங்கித் தாம் விரும்பிய தெய்வத்தை வழிபட்டு வாழ்தற்கும் நாட்டு மக்களுக்கு இயல்பாக அமைந்துள்ள உரிமை நிலையினையே சுதந்தரம் என்ற சொல்லால் நாளும் வழங்கி வருகின்றோம். இராமலிங்க அடிகளார் இந்நாட்டில் தோன்றிய கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நமது பாரதநாடு ஆங்கிலேயரது ஆட்சிக்கு உட்பட்டு உரிமையிழந்திருந்தது. அதனால் இந்நாட்டு மக்கள் தாம் பிறந்த நாட்டிலே பிறரது ஆட்சிக்கு அடங்கி அடிமைப்பட்டு அயலார் போற் சுதந்தரமின்றி வாழ நேர்ந்தது என்பதனை நம்மிற் பலரும் நன்கறிவார்கள்.

மக்களது பிறப்புரிமையாகிய இச்சுதந்தரம் என்பது மக்கட் சமுதாயத்தினரால் மட்டும் பாதுகாத்தற்குரிய அத்துணை எளிமையானதன்று என்பதனை உலகில் நாள் தோறும் நடைபெற்று வரும் பல்வேறு அரசியற் குழப்பங்களாலும் இனக்கலவரங்களாலும் நில நடுக்கம், எரி