பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374


வழி அடங்கி நடத்தற்குரியராதலேயன்றி. நமக்கெனச் சுதந்தரமுடையேம் அல்லேம். இவ்வாறு நாம் பெற்றுள்ள தேகம், நாம் நுகர்தற்குள்ள போகம், நுகர்கின்ற சீவனாகிய நாம் என்னும் மூவகையாலும் நமக்குச் சுதந்தரம் இன்மையினை நன்குணர்ந்து இறைவனது திருவருளாணை வழி அடங்கி நடத்தலே நம்மைப் பிணித்துள்ள ஆணவம் மாயை கன்மமென்னும் மும்மலப் பிணிப்பினின்று விடுதலை பெற்று உண்மைச் சுதந்தரர் ஆதற்குரிய உபாயமாகும். இந்நுட்பம்,

"நாமல்ல இந்திரியம் நம் வழியின்அல்ல வழி
நாமல்ல நாமும் அரனுடைமை - ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லை வினை
முற்செய்வினையும் தருவான் முன்"

(சிவஞானபோதம், வெண்பா-63)

என வரும் சிவஞான போத உதாரண வெண்பாவில் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். தன்வயத்தரல்லாத ஆன்மாக்கள், இவ்வுலகில் தேக சுதந்தரம், போக சுதந்தரம், சீவ சுதந்தரம் ஆகிய மூவகைச் சுதந்தரங்கட்கும் காரணமாகிய திருவருட் சுதந்தரம் பெறுதற்குரிய உபாயத்தினையே மெய்கண்டதேவர், இவ்வெண்பாவில் அறிவுறுத்தியுள்ளார்.

உயிர்களாகிய நாம் நம்மளவில் சுதந்தரர்கள் ஆக மாட்டோம் நாம் நமக்குரியனவாக எண்ணியுள்ள தேக சுதந்தரம், போக சுதந்தரம், சீவ சுதந்தரம் என்னும் இவையாவும் வெறும் போலிச் சுதந்தரங்களே. இவை என்றும் நிலைபேறுடையன அல்ல. நிலையற்ற இவற்றை நமக்குரிய சுதந்தரமாகக் கொள்வதைக் கைவிட்டு எல்லாம் வல்ல கடவுளின் திருவருளின் ஆணை வழி அடங்கி ஒழுகுதலே எல்லாச் சுதந்தரங்களுக்கும் சார்பாகிய, திருவருட்