பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384


தின்மர் பாடியருளிய இன்னிசைச் செழும் பாடல்களாகிய திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலநாயனார் அருளிய தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரம் பத்தாந் திருமுறையாகவும், திருவாலவாயுடையாராகிய சிவபெருமான் பாணபத்திரர் பொருட்டுச் சேரமான்பெருமாளுக்குப் பாடியருளிய திருமுகப்பாசுர முதலாக நம்பியாண்டர் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை ஈறாக அமைந்த நாற்பது பிரபந்தங்களும் பதினோராந் திருமுறையாகவும் அருண்மொழித் தேவராகிய சேக்கிழார் பெருமான் பத்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடியருளிய திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணம் பன்னிரண்டாந் திருமுறையாகவும் பின் வந்த சான்றோர்களால் முறைப்படுத்தப்பட்டன.

இவ்வருள் நூல்கள் அனைத்தும் தம்மை மறந்து சிவபரம் பொருளையே இடைவிடாது சிந்திக்கும அருளாளர்களால் அருளிச் செய்யப்பட்டனவாதலின், 'எனதுரை, தனதுரையாக' (1-76-1) என ஆளுடைய பிள்ளையார் அருளிய வண்ணம் எல்லாம் வல்ல இறைவனுடைய அருள்வாக்கெனவே கொள்ளத்தக்கனவாம்.

சைவ சமயகுரவர் நால்வருள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், நம்பியாரூரர் ஆகிய மூவரும் அருளிச் செய்த தெய்வ இசைப்பாடல்களைத் தேவாரம் எனவும், மணிவாசகப் பெருமான் அருளிய பத்திப் பனுவல்களாகிய பாடல்களைத் திருவாசகம் எனவும் வழங்குதல் மரபு. இத்திருமுறைப் பனுவல்களை இடைவிடாது ஓதி உள்ளம், உருகப் பெற்றவர் இராமலிங்க வள்ளலார் ஆதலின், அவர் பாடியருளிய திருவருட்பாவில் பன்னிரு திருமுறைகளின் சொற்பொருள் நலங்கள் எங்கும் இடம் பெற்று விளங்கக் காண்கின்றோம். சமய குரவர் நால்வரும்