பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386


ஈடுபடச் செய்யும் நோக்குடன், பாடிப் போற்றி இன்னிசைத் திருப்பதிகங்கள் தமிழ்மக்களின் அச்சத்தை நீக்கித் தம்தாட்டினைத் தாமே ஆளும் உரிமையுணர்வினைக் கிளர்ந்தெழச் செய்தன என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பேருண்மையாகும்.

'நாமார்க்கும் குடியல்லோம்', 'அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்சவருவதும் இல்லை' என்றாங்கு அப்பரடிகள் அருளிய மெய்மொழிகளை உளங்கொண்ட தமிழ் மக்களும், தமிழ் வேந்தர்களும் உரிமை யுணர்வுடையராய் வீறுபெற்று எழுந்தனர். செந்தமிழ்ப் பாண்டிநாடு நன்றியிலா நெறியாகிய புறச்சமய இருளில் நீங்கித் திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் ஒளியுடன் திகழ்வதாயிற்று.

தேவாரத்திருப்பதிகங்களை அன்புடன் ஓதி இறைவனை வழிபட்ட ஆதித்தன், பராந்தகன், அருள்மொழித் தேவனாகிய இராசராசன், கங்கை கொண்ட சோழன் முதலிய பிற்காலச் சோழ மன்னர்கள், தம் நாட்டிலிருந்து அயலார் ஆட்சியை நீக்கியதுடன் தமிழகம் முழுவதனையும், ஒருகுடைக்கீழ் ஆட்சி புரியும் பேராற்றல் கைவரப் பெற்றனர்; வங்காளம் முதலிய வடநாட்டுப் பகுதிகளிலும், கடல் கடந்த வெளிநாடுகளிலும் தமிழரது ஆட்சியும் தமிழர் நாகரிகமும் தமிழ் மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகளும் நிலைபெறச் செய்தனர். இவ்வாறு தமிழகத்திலும் வடநாட்டிலும் கடல் கடந்த 'சயாம்' முதலிய வெளிநாடுகளிலும், தமிழரது வீரமும், தமிழர் நாகரிகமும், பரவுவதற்குக் காரணமாய்த் தமிழ் மக்களுக்கு ஊக்கமும் உணர்வும் அளித்தவை, தேவார ஆசிரியர் முதலியோர் அருளிய திருமுறைப் பனுவல்களேயாகும். இவ்வுண்மை திருக்கோயில்கள் தோறும் திருப்பதிகம்