பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

391


வணிகன், திருமருகலில் தங்கியிருந்தபொழுது, நள்ளிரவில் விடந்தீண்டி இறந்தானாக, அவனுடன் வந்த நங்கையின் அரற்றுதலைக் கேட்ட ஆளுடைய பிள்ளையார், திருவுளமிரங்கி "சடையாயெனுமால்" என்னும் திருப்பதிகத்தைப் பாடி அவ்வணிகனை உயிர்ப்பித்தருளினார் என்பது வரலாறு. இவ்வருட் செயலை,

- "ஏச்சகல
விண் மருவினோனை விடநீக்க நல்லருள்செய்
வண் மருகல் மாணிக்க வண்ணனே".

(1962 கண்ணி 45)

எனவரும் தொடரில் மருகற் பெருமானைப் போற்று முகத்தால் குறிபபிட்டுள்ளமை காணலாம்.

திருஞான சம்பந்தப்பிள்ளையார் திருவீழிமிழலையில் தங்கியிருக்கும் பொழுது அவரைக்காண விரும்பிய காழிநகர மாந்தர், வீழிமிழலைக்கு வந்து பிள்ளையாரைத் தொழுது தங்களுடன் காழிப்பகுதிக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக் கொண்டார்கள். அவர்களது விருப்பத்தை உணர்ந்த பிள்ளையார் "இன்று கழித்து நாளை வீழிமிழலை யிறைவர் அருள் பெற்றுப் புறப்படு வோம்" எனக்கூறி அன்றிரவு துயிலமர்ந்தார். அந்நிலையில் விழிமிழலைப் பெருமான் பிள்ளையார்க்குக் கனவில் தோன்றி "யாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நீ இன்று வீழிமிழலையிற் காண்பாய்" என அருள்செய்து மறைந்தனர். துயிலுணர்ந்து விழிப்புற்று எழுந்த பிள்ளையார், கைகளைத் தலைமேற் குவித்திறைஞ்சித் திருவீழிமிழலைத் திருக்கோயிலுட் புகுந்து விண்ணிழி விமானத்தின்கண்ணே திருத்தோணிபுரத் திருக்கோலத்தைக் கன்டு மகிழ்ந்து "மைம்மருபூங்குழல்" என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். இத்திருப்பதிகத்தின்