பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

397


பெருஞ்சோதியில் காதலியைக் கைப்பிடித்துப் புகுபவர், தம் திருமணம் காண வந்த எல்லோரையும் முன்னே யனுப்பி அதன்பின் தாமும் தம் மனைவியாரும் இறைவனது எழில்வளர் சோதியிற்புகுந்து சிவபெருமானோடு ஒன்றி உடனானார் என்பது வரலாறு. இவ்வரலாற்று நிகழ்ச்சியை,

"........................ விழிப்பாலன்
கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதரு
நல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே"

(1962 கண்ணி-6)

என விண்ணப்பக் கலிவெண்பாவில் வள்ளலார் குறித்துள்ளமை காணலாம். இதன்கண் "விழிப்பாலன்" என்றது, சிவபெருமானது நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானை. முருகப் பெருமானே, திருஞான சம்பந்தப் பிள்ளையாராகத் திருஅவதாரஞ் செய்தருளினார் என்பது அருட்பிரகாச வள்ளலாரின் நம்பிக்கையாகும். அதுபற்றியே ஞானசம்பந்தப் பிள்ளையாரை இத்தொடரில் "விழிப்பாலன்" எனக் குறித்தார் வள்ளலார்.

'ஆருகதச் சமயக் காட்டை அழித்த வெங்கனலேபோற்றி'

(முருகன் போற்றி 512)

எனவும்,

"சைவந்தழைக்கத் தழைத் தாண்டி-ஞான
சம்பந்தப் பேர்கொண் டழைத்தாண்டி"

(சண்முகர் கொம்மி 534)

எனவும் வரும் தொடர்களில் ஞானசம்பந்தப் பெருமான் செய்த செயல்களை முருகப் பெருமான் செயல்களாக