பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

405


ஒட்டி வாழ்பவனாகிய சிவபெருமான். 'அற்றசிவன்' என்ற தொடரில் உள்ள அறுதல் என்னும் வினை, இரண்டற ஒன்றுபடுதலைக் குறித்தது. இஃது ஒட்டி வாழ்தல் எனவும் கூறப்படும். 'உயிராவணம் செய்திட்டு உன்கைத் தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி' (6-25-1) எனவரும் அப்பர் அருளனுபவ மொழி இங்கு நினைக்கத் தகுவதாகும். "அற்றவர்க்கு அற்றசிவன்" என்னும் இத்தொடர்ப் பொருளை,

"முற்றும் அற்றவர்க் கற்றவன்"

(இருபா இருபது 20)

எனவரும் தொடரில் அருள் நந்திசிவனார் விளக்கியுள்ளமை காணலாம். இத்தொடர் உலகெலாமாகி, வேறாய் உடனுமாய் நிற்கும் இறைவன், பாசப் பிணிப்பின் நீங்கித் தன்செயல் அற்று இறைபணி நிற்கும் சிவஞானியர்களோடு தன் செயலே அவர் செயலாகும்படி ஒன்றுபட்டு நிற்கும் அத்துவித நிலையைப் புலப்படுத்துவதாகும்.

இவ்வுண்மையினை,

"அற்றவர்கட் கற்றசிவ னாமென்ற அத்துவித
முற்றுமொழி கண்டருளின் மூழ்குநா ளெந்நாளோ"

(தாயு-அறிஞருரை-2)

எனவரும் பாடலில் தாயுமான அடிகளார் தெளிய விளக்கியுள்ளமை காணலாம்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய'அற்றவர்க் கற்ற சிவன்' என்ற தொடரின் பொருளையும் அத்தொடருக்கு அருள்நந்திசிவனாரும், தாயுமான அடிகளும் கூறிய விளக்கத்தினையும் உளங்கொண்ட அருட்பிரகாச வள்ளலார், பாசப் பிணிப்பின் நீங்கித் தன் செயலற இறைபணியில் நிற்காத நெஞ்சத்தினைத்