பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


பொருளுக்கும் அமைந்த தொடர்பு பற்றிய இவ்விளக்கம் 'பிணை பெண்ணொடு ஒருமையின் இருமையுமுடை அன்ணல்' எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருள் மொழியை அடியொற்றி அமைந்ததாகும். இவ்வாறு ஒன்றுமலார் இரண்டுமலார் ஒன்றிரண்டு மானார் என்ற இறைவனை ஆண் என்று குறிப்பதா, பெண் என்று குறிப்பதா என ஒரு வினா எழுதல் கூடும். இவ்வினாவுக்கு விடையாக அமைந்ததே 'ஒன்றிரண்டுமானார்’ என்ற அடிகளார் திருவாக்காகும். "ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி’ எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழி இங்கு நினைக்கத் தகுவதாகும்.

அருவருக்கு முலகவாழ் வடங்க நீத்தோர்க்
கானந்தப் பெருவாழ்வா மாடல் காட்ட
மருவருக்கன் மதிவளிவான் யமானன் தீநீர்
மண்ணெனுமெண் வகையுறுப்பின் வடிவுகொண்ட
ஒருவனுக்கும் ஒருத்திக்கு முருவொன் றாலவ்
வுருவையிஃ தொருத்தன் என்கோ ஒருத்தி என்கோ
இருவருக்கு முரித்தாக 'ஒருவர்' என்றோர்
இயற்சொல் லிலதெனின் யான்மற் றென்சொல்கேனே.

(54)

என வரும் சிதம்பரச் செய்யுட்கோவையில் குமரகுருபர அடிகள் அம்மையப்பனாகிய இறைவனை ஒருவன் என்றோ ஒருத்தி என்றோ பிரித்து வழங்கத் தேவையில்லை என்றும், ஆனும் பெண்ணுமாகிய இருவருக்கு முரியதாக அமைந்த “ஒருவர்” என்னும் இயற்றமிழ்ச் சொல்லாலேயே அம்மையப்பராகிய இறைவரைப் போற்றுதல் பெரிதும் பொருத்தமுடைய தென்றும் சுவைபடக் குறித்துள்ளமை காணலாம்.