பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29


காலத் தமிழ் மக்கள். பல்வேறு வடிவங்களிற் பலவிடங்களிலும் மக்களால் மேற்கொள்ளப்படும் எல்லா வழிபாடுகளும் முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளையே சார்ந்து பயன் விளைவிக்கும் என்பது பண்டைத் தமிழ் மக்களது தெளிவான தெய்வக் கொள்கையாகும். இவ்வுண்மையை,

வேறுபல் லுருவிற் கடவுட் பேணியும்

எனவும்,

ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறு வேறு பெயரின்
எவ்வயி னோயும் நீயே

எனவும் வரும் சங்க இலக்கியங்களால் நன்குணரலாம். இறைவனைத் தாயுந் தந்தையுமாகக் கருதி வழிபடும் நிலையில் தந்தையினும் தாயினை முந்தி வழிபடுதல் வேண்டும் என்னும் ஆர்வமுடையோர் மிகுதியாக, அவர்களால் அம்மைக்குரிய தனிக் கோயில்கள் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் அமைக்கப் பெற்றன. காடுறையுலகமாகிய முல்லை நிலத்தின் தெய்வமாக நீலமேனி நெடியோன் வழிபடப் பெற்றது போலவே, காடு கிழாளாகிய கொற்றவையும் நீலநிறம் வாய்ந்த திருமேனியுடையவளாகவும், ஆழியும் சங்கும் ஏந்திய கையினளாகவும் திருவுருவமைக்கப் பெற்று மாயோன்தங்கையாக வழிபடப் பெற்றாள். போரில் வெற்றி நல்கும் கொற்றவையாகிய அன்னை அமைதியளிக்கும் நிலையில் சிவனது இடப்பாகத்தில் அமர்ந்தருளிய உமையம்மை