பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


யாகவும் இயைத்துப் போற்றப் பெற்றாள். தெய்வ வழிபாட்டில் இத்தகைய உறவுமுறை சங்க காலத்திற்கு முன்னிருந்தே வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. சிவபெருமான் தனது சத்தியாகிய உமையம்மையினை ஒருருவிற் கொண்டு அர்த்தநாரீசுவரத் திருமேனியினராக (மாதொரு பாகராக) அருள்புரிதல் போலவே, உமையின் தமையன் எனப் போற்றப் பெறுந் திருமாலைத் தனது ஒருபாகத் தடக்கிய நிலையில் சங்கர நாராயணர் (மாலொருபாகர்) ஆக அன்பர்க்கு அருள்புரிகின்றான் என்பதும் சங்க காலந்தொட்டு நிலைபெற்று வரும் தெய்வ வழிபாட்டு மரபாகும்.

சிவனும் திருமாலும் ஓருருவினராக (சங்கரநாராயணராக)ப் போற்றப் பெறும் இவ்வழிபாடு, சைவத் திருமுறைகளிலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திலும் இடம் பெற்றுள்ளது.

வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து
உருவுட னியைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடலணி கொளாஅ
வந்த மாலை.

எனவரும் அகப்பாடலில் அந்திவானமும் கருங்கடலும் இயைந்த தோற்றத்திற்கு மாலொருபாகர் (சங்கர நாராயணர்) திருமேனியை மதுரைக் கண்ணத்தனார் உவமை கூறியுள்ளார். எனவே மாலொரு பாகர் (சங்கர நாராயணர்) திருமேனி கடைச் சங்க காலந்தொட்டுத் தமிழகத்தில் வழிபடப் பெற்று வருகின்றதெனத் தெரிகிறது. சிவனும் திருமாலும் முழுமுதற் பொருளால் ஒன்றே என வலியுறுத்தும் முறையில் அமைந்த சங்கர நாராயணர் திருவுருவம் அப்பனாகிய, சிவமும்