பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


அம்மையாகிய சத்தியும், ஞாயிறும் அதன் கதிரும் போலப் பொருளால் ஒன்றேயென வற்புறுத்தும் உமையொருபாகர் (அர்த்தநாரீசுவரர்) திருவுருவ அமைப்பினை அடியொற்றியதாகும் மாயோன் தங்கை மாயோள் எனவும், நாராயணன் தங்கை நாராயணி யெனவும், காத்தற் கடவுளாகிய திருமாலின் அம்சமாகக் கொண்டு போற்றப் பெறும் கொற்றவை, சிவனுக்குரிய கொன்றையும், திருமாலுக்குரிய துளவமும் சேரத் தொடுத்த மலர்மாலையைச் சூடியவளாகவும், திருமால் போன்று ஆழியும் வளையும் ஏந்திய கையினளாகவும், சிவபெருமானைப் போன்று நஞ்சுண்ட கறுத்த கண்ட முடையவளாகவும் சிவபெருமான் நிலையிலும் திருமால் நிலையிலும் ஒருங்கு வைத்துச் சிலப்பதிகார வேட்டுவ வரியிற் போற்றப் பெற்றுள்ளமை காணலாம். சிவனும் உமையும் ஒருவராகத் திகழும் அர்த்த நாரீசுவரர் திருவுருவினைப் போன்றே, சிவனுடன் திருமாலை யொருகூற்றினராகக் கொண்டு போற்றும் சங்கரநாராயணர் திருவுருவும் அன்பர்களால் ஒருருவாகவைத்துப் போற்றப் பெறுவதாயிற்று. சிவபரம் பொருள் ஒன்றே சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையில் வைத்து வணங்கப் பெறுதல் போன்று, முழுமுதற் பொருள் ஒன்றே சிவனும் திருமாலும் என இருமை நிலையில் வைத்து வணங்கப் பெறுகின்றது என்னும் இவ்வுண்மை மாதொரு கூறர் (அர்த்தநாரீசுவரர்) மாலொரு கூறர் (சங்கரநாராயணர்) ஆகிய திருவுருவ அமைப்புக்களால் இனிது புலனாகும்.

கிழக்கே விடியற் காலையிலே இளஞ்செவ்வியுடைய செஞ்சுடர் விரிந்து திகழக் கடலிடையே தோன்றும் ஞாயிறு, தன்கீழுள்ள கடல்நீர் நீலமும் பசுமையும் கலந்த நிறத்தினதாய்த் துலங்காநிற்பக் காணப்படும் அழகிய காட்சி, அழகேயுருவாகிய முருகன் எழில்கிளர் தோகை