பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


மனம் குளிர்ந்து போற்றி ஒருமை நிலை பெற்று அமைதி பெறும் நிலையில் அமைந்தது சிவ வழிபாடாகும். எனவே காலை இளஞாயிற்றின் தோற்றம் என்றும் இளையோனாகிய சேயோன் திருமேனியையும், மாலை ஞாயிற்றின் முதிர்ந்த செவ்வித்தாகிய அந்தி வானத் தோற்றம் முது முதல்வனாகிய சிவபெருமானது செம்மேனியையும் குறிப்பனவாக இலக்கியங்களில் குறிக்கப் பெறுதலின், காலை இளங்கதிரவனை என்றும் இளையோனாகிய முருகன் எனவும், மாலை முதிர் கதிரவனை முருகனுக்குத் தந்தையாகிய சிவபெருமான் எனவும் தமிழ் முன்னோர் கருதிப் போற்றினர் எனத் தெரிகிறது. காலை ஞாயிறும் மாலை ஞாயிறும் கால வேறுபாட்டால் இரு நிலையினவாகக் கானப்படினும் பொருள் அளவில் இரண்டும் ஒன்றே ஆதல் போன்று சேயோனும் சிவனும் இரு தெய்வங்களாக வைத்து வணங்கப்பட்டாலும், இருவரும் ஒருவரே என்பது சேயோன் சிவன் என வழங்கும் பெயர் ஒற்றுமையாலும் இனிது புலனாகின்றது. முருகனுக்கு உரிய சேயோன் என்னும் பெயர் செம்மை நிறம் வாய்ந்த திருமேனியை உடையான் என்னும் பொருளுடையது. சிவன் என்னும் பெயரும் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது. எனவே சொல் ஒற்றுமையாலும் பொருள் ஒற்றுமையாலும் சேயோனாகிய முருகனும் சிவனாகிய இறைவனும் ஒரே முழுமுதற் கடவுளாகக் கருதப்பெற்றமை காணலாம். குமரனாகிய முருகனும் அவன் தந்தையாகிய சிவனும் முழு முதற்கடவுளின் இருவேறு கோலங்களே என்னும் மெய்ம்மையினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்ததே கந்தபுராண வரலாறு ஆகும். முருகப் பெருமானைக் குறித்து வழங்கும் திருப்பெயர்களுள் கந்தன் என்பதைத் தமிழ்ச்சொல்லாகக் கொண்டு கந்தன் - தூண் வடிவில் நிறுத்தப்பட்ட கந்தில்