பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


கொள்கையாளரிடமிருந்து தம்மை வேறுபடுத்துத் தம்மை உயர்த்திக் கோடற்கும், தம் கொள்கையினையுடன்படாத பிறரைத் தம்மினின்று வேறு பிரித்துக் காட்டுதற்கும் சைவர், வைணவர், புத்தர், சமணர், வைசேடிகர், நியாயவாதிகள், உலகாயதர், மாயா வாதிகள் என்றாங்கு வெவ்வேறு குழுவினர்க்கு வெவ்வேறு சமயப் பெயர் கொடுத்து வழங்கும் நிலை சமயவாதிகளிடையே நிலைபெற்று வேரூன்றலாயிற்று. சமயம் மதம் என்ற பெயர்களும், அப்பெயர்களாற் பகுத்துரைக்கப்படும் பிரிவினைகளும் இன்றி எல்லோரும் ஒன்றுபட்ட பொதுமையுணர்வினராய் எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே பல்வேறு வடிவிற் பல்வேறு பெயர்களில் வணங்கி இவ்வாறு அமைதி நிலையில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே வடக்கிருந்து வந்து நிலைபெற்ற சமண, புத்த சமயத்தவர்களாலும் அவர்களோடு முரண்பட்டு வந்த வைதிகக் குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப்போர்களும் இந்நாட்டிற் கிளைத்து வளர்ந்தன. இவ்வாறு இந்நாட்டில் முரண்பட்டு வளர்ந்துள்ள பல்வேறு மதங்களும் வடக்கிருந்து தமிழகத்திற் குடியேறின. அயலவர்களாலேயே பல்கின என்பதற்கு அம்மதங்கள் பலவும் வடமொழிப் பெயர் கொண்டு உலவுதலும், அம்மதங்களைப் பற்றிய நூல்களெல்லாம் வடமொழியில் எழுதப் பெற்றிருத்தலுமே உறுபெருஞ் சான்றாகும். இதனை நன்குனர்ந்த சுவாமி விவேகானந்தர் மதச் சண்டைகளும் சாதிவேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒருபெருங் கருவியாய் அமைந்தது வடமொழியே எனவும், அம்மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப் போராட்டங்களும் தொலைந்து போகும் எனவும் வருந்திக் கூறியுள்ளார். (மறைமலை அடிகளாரின் தமிழர்மதம் நூல். பக்கம் 22) பழைய