பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


தமிழ் நூல்களிற் சமயப் போருக்காவது சாதிச் சண்டைக்காவது இடமில்லை என்பதைச் சங்க இலக் கியங்களால் நன்குணரலாம்.

இன்னவுரு, இன்னநிறம் என்று அறியவொண்ணாத செம்பொருளாகிய இறைவனைத் தூணுருவில் நிறுத்தி வழிபடும் வழிபாடு பண்டைக்காலத்தில் சமய வேறுபாடு இல்லாத பொதுமைவாய்ந்த கடவுள் வழிபாடாகவே நிகழ்ந்து வந்துள்ளது. இதன் வளர்ச்சியே சிவலிங்க வணக்கமாகும்.

மண்ணுயிர்களுக்கு உள்ளும் புறம்பும் நின்று அருள் புரியும் முழுமுதற்கடவுளை உலகிற் காணப்படும் புறப் பொருள்களுள் ஒன்றாலாகிய உருவிலோ, அன்றி அகத்துள் கருதியுணரப்படும் அருவிலோ வைத்து வழிபடும் வழிபாடு இறை இயல்பினை நன்கு விளக்காதெனவுணர்ந்த முன்னைய அருளாளர்கள், அம்முதல்வன் உயிர்களின் அகத்தே உள்ளிருந்தெழும் சோதியாகவும், உலகின் புறத்தே தோன்றி இருள்நீக்கும் சுடராகவும் திகழுந்திறத்தினை மக்கள் உணர்ந்து போற்றும் முறையில் அருவுருவாகிய இச்சிவலிங்கத் திருவுருவினை அமைத்து வழிபடுவாராயினர். இவ்வுண்மை,

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

(பெரிய, சாக்கிய நாயனார்-8)

எனவரும் சேக்கிழார் வாய் மொழியால் நன்கு தெளியப்படும்.

இலிங்கம் என்ற சொல் அடையாளம், குறி என்ற பொருளுடையது. காண்டற்கரிய கடவுளை மனத்தாற்