பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


டொழுகிய சமயப் பொதுநிலையை யாவரும் உணர அறிவுறுத்தலையே தமது குறிக்கோளாகக் கொண்டனர். உத்தரஞான சிதம்பரமாகிய வடலூர்ப் பெருவெளியில் எல்லா மக்களும் தத்தம் வேறுபாடுகளை மறந்து ஒரே குலத்தார் என்னும் ஒற்றுமை யுணர்வுடன் முழுமுதற் பொருளை அருவுருவத் திருமேனி யுடையதாய்ப் பேரொளிப் பிழம்பினதாய், ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ்சோதியாம் நிலையில் கருதி வழிபட்டு உய்தியடைதற் பொருட்டு ஞானசபையை நிறுவியருளினார்கள் என்பது யாவரும் அறிந்த செய்தியாகும்.

வேறுபடும் சமய மெல்லாம் புகுந்து பார்க்கில்
விளங்கு பரம் பொருளே நின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற் றம்மா.

(தாயு-கல்லா-25)

எனத் தாயுமானப் பெருந்தகையார் அறிவுறுத்திய சமயப் பொது நிலைக் கொள்கையைத் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நன்கு வேரூன்றச் செய்து, அதன் பயனாக நாட்டில் நிலவும் சமயப் பூசல்களை அறவே அகற்றுதலைத் தமது குறிக்கோளாகக் கொண்டு அருட்பிரகாச வள்ளலார் அருளிய திருப்பாடல்கள் பலவாகும். இறைவனை விழைந்த ஆருயிர்த் தலைவி ஒருத்தியின் அநுபவ மொழியாக வள்ளலார் அருளிய அநுபவ மாலையில்,

பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகை என்கணவர் திருப்பேர்புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாரா
யணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன்