பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


மருள் நிறைந்த மனக்கருங்கற் பாறையுமுட்
கசிந்துருக்கும் வடிவத் தோயே!

(திருவருட்பா2070)

என அடிகள் அருளிய திருப்பாடலால் அறிவுறுத்தப் பெற்றுள்ளமை காணலாம். எல்லா அண்டங்களின் அகத்திலும் அவற்றைக் கடந்து அப்பாற்பட்டு அவற்றின் புறத்திலும் மன்னுயிர்களின் உள்ளத்திலும், ஒளியுரு வாய்த்தோன்றி உலகின் புறஇருளையும் உயிர்களின் அகஇருளையும் நீக்கி அருள்புரியும் - பேரருளும் பேராற்றலு முடைய இறைவன் பெருஞ்சோதியாகத் திகழ்கின்றான் என்னும் இவ்வுண்மையினை,

காரொளிய திருமேனிச் செங்கண் மாலும்
கடிக்கமலத் திருந்தவனும் காணாவண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகும் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே,

(6–1–11)

எனவரும் பெரிய திருத்தாண்டகம் நன்கு புலப்படுத்தக் காணலாம். இதன்கண் செங்கண் மாலும் கடிக்கமலத் திருந்தவனும் (பிரம்மனும்) காணாவண்ணம் சீரொளிய தழற் பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழ்ஒளியென்றது, எல்லாம் வல்ல இறைவன், அண்டத்தினுள்ளே ஒளியுரு வினனாய்த் திகழும் திறத்தைக் குறிப்பதாகும். இங்ஙனம் தோன்றும் ஒளியினை அண்ட ஒளி என்பர் பெரியோர். சிந்தைதனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி என்றது, கண்ணை மறைத்து நிற்கும் புற இருளைப் போலன்றி ஏனைய பொறிகளையும் மறைப்பதாய், உயிர்களது