பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v


சைவ சமயக் குரவர்களும் சன்மார்க்கக் குரவரும் கைகொடுத்து அருள்துணை வளர பேராசிரியர் வாரணனார் திருவாய்மலர, வள்ளலார் கொள்கைகளை வையகம் முழுவதும் பரப்ப வழிவகை காண்பதை வாழ்க்கை நெறியாகக் கொண்ட எந்தையார் பழ சண்முகனார் திருக்கரத்தால் எழுதப் பெற்றது. இந்த எழுத்துத் தவம் நீண்ட நாள் நீண்டது. நூல் உருவாகும் போது தடைகள், விடைகள், உரைகள், மறுப்புரைகள் மலர்ந்தன. திருவருட்பாவின் வித்தும் வேரும், திருமுறை களில் உள்ளமை இனம் கண்டு கொள்ளப்பட்டது. சில நாட்களில் உரையாடலோடு எழுத்து முயற்சி அமைதியாய்விடும், கருத்துப் பரிமாற்றத்தில் சில நாட்கள் கழித்துச் சொல்வளம் வீறு கொண்டு எழுந்ததுமுண்டு. அருளாளர்களின் சிந்தனை இந்நூலில் செவ்விய வடிவம் பெறுவதற்கு ஒரு வேள்வி நடந்ததாகவே கருதுகிறேன்.

இந்த ஆய்வு வேள்விக்கு இடு பொருள் அறிவு சான்ற வாதங்களே! அமைதியான (சத்விசாரமான) கலந்துரையாடலே, விளைவு இத்'திருவருட்பாச் சிந்தனை' என்னும் பெருநூல். இந்நூல் வள்ளலார் ஆய்வு வரிசையில் தலைமையும் தாய்மையும் உடையது; தனித்தன்மை சான்றது. மறுமலர்ச்சிப் பார்வை கொண்டது. புதிய பார்வைக்குத் தடம் வகுப்பது; சைவ உலகமும் அருட் சோதி அன்பர் உலகமும் அமைதியாய்க்கை கோத்துக் களித்துலவ வைப்பது.

தமிழ்ச் சமுதாயத்தின் சமயக் கொள்கைகளும் கோட்பாடுகளும் வரலாற்று உணர்வுடன் அறிவியல் அணுகுமுறையில் இந்நூலில் விளக்கப்படுகின்றன. ஆசிரியரின் ஆராய்ச்சி வன்மையால் திருவருட்பாவின் புத்தொளி பரவுகிறது. சீலம் நிறைந்த நல்லவர்களின்