பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


தில் 'சுடர் விட்டுளன் எங்கள் சோதி' எனவரும் தொடரில் சுடர் என்றது அண்டத்தின் அகத்தும் புறத்தும் காணப்பெறும் ஒளியின் பரந்து திகழும் பருமை நிலையையும், சோதி என்றது, உயிர்களின் அகத்தே திகழும் நுண்மை நிலையையும் குறிப்பதாகும் எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இத்திருப்பாசுரத் திருப்பாடலுக்கு உரை கூறப் புகுந்த சேக்கிழார் பெருமான்:

தோன்று காட்சி சுடர்விட்டுளன் என்பது
ஆன்ற அங்கிப் புறத்தொளியாய் அன்பின்
ஊன்ற உள்ளெழுஞ் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்டார்க் கிது பொரு ளென்றதாம்.

(பெரிய-சம்பந்தர் - 825)

'மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம் பற்றும் என்பது
ஆதிச்சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள்ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்தி வாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின்நெறி பேர்மின் என்றாம்’

(௸ - 826)

என வரும் செய்யுள்களால் இதன் பொருளைத் தெளிவு படுத்தியுள்ளார். சுடர் என்பது ஒளிப் பொருளின் புறத் தோற்றத்தையும், சோதி என்பது அதன் அகத்தோற்றத்தையும் குறிச்கும் நிலையில், இத்திருப் பாசுரத்தில் ஆளப் பெற்றுள்ளமை மேற்காட்டிய சேக்கிழார் வாய்மொழியாற் புலனாதல் காணலாம்.