பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

 உள்ள 'கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை' என்ற தொடரை அடியொற்றி அமைந்தனவாகும். கேழில் பரஞ்சோதி = ஒப்பு இல்லாத பெருஞ்சோதி, என்றது ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதியாகிய கடவுளை. கேழில் பரங்கருணையென்றது, அம்முதல்வனினின்றும் பிரித்துணர வொண்ணாத திருவருள் விளக்கமாகிய சிவசத்தியை. எல்லாம் வல்ல இறைவன் அருளே உருவாகத் திகழும் தனிநிலையில் 'சிவம்' எனவும், தனது பேரருளின் விரிவாய் உலகுயிர்களில் எல்லாம் கலந்து நின்று அவற்றைத் தொழிற் படுத்தும் நிலையில் 'சத்தி' எனவும் திகழ்கின்றான் என்பர் பெரியோர். இந்துட்பம்,

கற்பனை கடந்தசோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புற நடஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

(பெரிய-தில்லைவாழ்-2)

எனவரும் சேக்கிழாரடிகள் வாய்மொழியால் இனிது புலனாதல் காணலாம்.

இதுகாறும் கூறியவாற்றால் உலகெலாம் இயக்கியருளும் அருளே உருவாகிய இறைவன், அண்டங்கள் எல்லாவற்றிற்கும் அப்பாலும், அண்டத்தின் உள்ளும், ஆன்மாக்களின் அகத்திலும் சுடர்விட்டு விளங்கும் சோதியாய்த் திகழ்கின்றான் என்பதும், அருட்பெருஞ்சோதி ஆண்டவனாகிய அம்முதல்வனது தனிப்பெருங்கருணையே உலகுயிர்களை யெல்லாம் சூழ்ந்து தனது விரிவுக்குள் அடக்கிக் கொண்டு மன்னுயிர்களின் வாழ்க்கைக்குப் பற்றுக் கோடாக அமைந்துள்ளது என்பதும், எல்லாம் வல்ல சிவபரம் பொருளைச் சமயங் கடந்த நிலையில்