பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


பயனருளப் பொருள்கள் பரிவாரமாகிப்
பண்புறவுஞ் செளபான பட்சங்காட்டி
மயலது மந்திரஞ் சிட்சை சோதிடாதி
மற்றங்க நூல் வணங்க மெளன மோலி
அயர்வறச் சென்னியில் வைத்து ராசாங்கத்தில்
அமர்ந்தது வைதிகச் சைவம் அழகிதந்தோ.

(௸ 10)

எனத் தாயுமான அடிகளும் அருளிய திருப்பாடல்களால் சத்தியஞானப் பொதுவாகிய சிதம்பரம் என்னும் சிற்றம்பலத்தின் இயல்பும், எல்லாம் வெளியே எனத் திகழும் அத்தெய்வ சபையினை எல்லாச் சமயத்தவரும் வந்து இறைஞ்சா நிற்பர் என்னும் உண்மையும் நன்குபுலப் படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இவ்வாறு முன்னேய அருளாளர்களால் விளக்கப் பெற்றதும், சமய வேறு பாடின்றி எல்லாச் சமயத்தாரும் அன்பினாற் கூடியிருந்து வழிபாடு செய்தற்குரிய பொதுமை வாய்ந்ததுமாகிய தெய்வ சபையினையே வள்ளலார் உத்தரஞான சிதம்பரமான வடலூர்ப் பெருவெளியில் இற்றைக்கு 114 ஆண்டுகட்கு முன்னே நிறுவியுள்ளார்கள் என்பது தமிழ் மக்கள் எல்லோரும் உளங்கொளத்தக்க செய்தியாகும்.

எனவே, வள்ளலார் கண்ட உத்தரஞான சிதம்பரத்து சத்தியஞானசபை வழிபாடு முன்னைப் பழமைக்கும் பழமையதாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையதாய் விளங்கும் தனிச் சிறப்புடையது என்பது நன்கு தெளியப் படும்.