பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆன்ம நேய ஒருமைப்பாடு

ஆன்ம நேய ஒருமைப்பாடு என்பது மன்னுயிர்த் தொகுதியெல்லாவற்றையும் ஒர் இனமெனக் கருதி எல்லா உயிர்களிடத்திலும் அன்புடையராயொழுகும் ஒருமையுணர்வின் இன்றியமையாமையைக் குறிப்பதாகும். ஆன்மா-உயிர்; நேயம்; அன்பு; ஒருமை; அன்பெனும் பாசத்தால் எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணும் மனத்தின் ஒருமைப்பாடு. உயிர் என்பது காட்சிக்குப் புலனாகாத அருவப்பொருள்; 'காணாமரபிற்று உயிரென மொழிப' (தொல்-களவியல்-சூ.-ந. உரைமேற்கோள்) என்பது பழம்பாடல். காண முடியாத உயிரின் உண்மையைக் காணப்படும் அதன் உடம்பினைக் கொண்டு நாம் கருதியுணர்கின்றோம். உயிரோ உணருந்தன்மையது. உடம்போ உணர்வற்றது. உயிர் என்றும் அழியாத நிலை பேறுடையது. அது பற்றியே அதனை 'மன்னுயிர்' என வழங்குகிறோம். உயிரினது நிலைக்களமாகிய உடம்போ அழியக்கூடியது. அறிவில்லாததும் அழியக் கூடியதுமாகிய இவ்வுடம்பிற்கும், அறிவுடையதும் நிலை பேறுடையதுமாகிய உயிருக்கும் உண்டாகிய தொடர்புக்குக் காரணம் யாது என்னும் ஐயம் எழுதல் இயல்பு. இங்ங்னம் தோன்றும் ஐயத்தினை நீக்கி உயிருக்கும உடம்புக்கும் ஏற்பட்ட தொடர்பினை விளக்கு முறையிலமைந்தது 'அன்போடியைந்த வழக்கென்ப,