பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

 சக்தியெனப்படும் இந்நியதி காரணமாகவே உலகிற் பல்வேறு உயிர்களும் பல்வேறு உடம்பினைப் பெற்றனவாய், மாறிப் பிறந்து வருகின்றன என்பர் சைவசித்தாந்திகள். இவ்வாறு உயிர்த் தொகுதிகள் தாம் தாம் பிறக்கும் இடவகையாலும் அவ்வப்பொழுது மேற் கொள்ளும் உடல் வகையாலும் வேறுபட்டனவாயினும், உணர்வுடைய பொருளாய் உயிரெனப் பேசப்படுந் தன்மையில் ஒற்றுமையும், உயிர்ப்பண்பாகிய அன்பின் தொடர்ச்சியினால் உறவும் உடையனவேயாம். இவ்வுண்மையைச் சங்க காலச் சான்றோர் தம் அநுபவத்தால் உணர்ந்து, ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்கு வித்திட்டுள்ளார்கள். இந்துட்பம்,

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானாது
கல்பொருதிரங்கு மல்லற் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப்படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாதலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே

என வரும் கணியன் பூங்குன்றனார் பாடலால் உய்த்துணரப்படும். வானத்தினுலவும் மேகம் பெருமழையைப் பெய்தமையால் உண்டாகிய வெள்ளப்பெருக்கு மலைமுகட்டில் உள்ள கற்களை யலைத்துக்கொண்டு