பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


வுயிர் செய்த வினைப்பயனால் பெறுவதாதலின் யாராலும் தெரிந்து காணுதற்கரியதாகும். அவ்வுயிர்க்கு, உண்மையான அன்பினைச் செலுத்துவாயானால், அவ்வுயிரோடு தொடர்புடைய எல்லா உயிர்களிடத்திலும் இரக்கமுள்ளவளாய் அன்பு செலுத்துதல் வேண்டும், என ஆன்மநேய ஒருமைப் பாட்டுணர்வினை அறிவுறுத்துவதாக அமைந்தது,

யாங்கிருந் தழுதனை யிளங்கோன் றனக்குப்
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை
உடற்கழுதனையோ? உயிர்க்கழுதனையோ?
உடற்கழு தனையேல் உன் மகன் தன்னை
எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே!
உயிர்க்கழுதனையே லுயிர் புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துணர்வரிய
தவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி
எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்.

எனவரும் மணிமேகலைத் தொடராகும்.

ஆருயிர்களிடத்திலே செலுத்தும் அன்பு அவ்வுயிர்கட்கும் உயிராகிய சிவபரம் பொருளிடத்தும் சென்று சேரும் இயல்பினதாகும். உயிர்ப் பண்பாகிய அன்புக்கும், உயிர்க்குயிராகிய சிவத்துக்கும் உள்ள பிரிக்கமுடியாத அன்பின் தொடர்பினை யுணர்த்துவது,

அன்பு சிவமிரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

(திருமந்திரம். 270)

என வரும் திருமந்திரமாகும்.