பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பாடிய “அரவணையான் சிந்தித்தரற்றும் மடி” என்ற திருவடித் திருத்தாண்டகத்திலும் திருவடிப் புகழச்சி பாடியுள்ளார்.

சுந்தரமூர்த்திகள் திருப்புன்கூரில் பாடிய “அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத” என்ற பதிகத்தில் இறைவனுடைய திருவடியைத் தாம் அடைவதற்குரிய காரணத்தைப் பல படப் புகன்றுள்ளனர்.

“பொடியுடை அரவனை அந்த ணாளன்
அடியினை தங்த அருளே யாகும்”

என்று அகத்தியர் தேவாரத்திரட்டில் மூன்று பதிகங்கள் திருவடி பற்றிய பதிகங்களாகக் கூறப்பெற்றுள்ளன. இவற்றுள் “பொடியுடை” என்பது திருஞானசம்பந்தர், திருவாழ்கொளி புத்துாரில் பாடிய பதிகமாகும். இதில்,

“கடிகமழ் மாமல ரிட்டுக்
கறைமிடற்றான் அடிகாண்போம்”
“விரை கமழ் மாமலர்தூவி
விரிசடையா னடிசேர்வோம்”

என்றின்னோரன்னவாறு “மலர்தூவி அடி அடைவோம்” என்று ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தர் “திருந்தலார்புரம்” என்ற திருவலஞ்சுழித் தேவாரத்திலும், திருமூலர் “மந்திரமாவதும்” என்ற திருமந்திரத்திலும் (1604) திருவடியைப் புகழ்ந்தோதியுள்ளனர்.

3. வள்ளலார் “திருவடி” பற்றி அருளிய திருவருட்பாப் பதிகங்கள்

முதல் திருமுறை 19ஆவது, “திருவடி சூடவிழைதல்” என்ற பதிகம், திருத்தணிகையில் கோயில் கொண்டருளும் பெம்மான் மேல் பாடப் பெற்றது; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பத்துக் கொண்டது; ஒவ்வொரு பாடலும், “நின் திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே” என்ற முடிபு உடையது.

இரண்டாம் திருமுறை 20ஆவது “திருவடிச்சரண்புகல்” என்ற பதிகம், திருவொற்றியூரில் அருளப் பெற்றது; எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பத்துக் கொண்டது; பாட்டுத் தோறும், “ஒற்றியூர்ச் செல்வத்தந்தையார் அடிச்சரண் புகலாமே” என்ற முடிபு உடையது.

மூன்றாம் திருமுறையில் முதலிற் காணப்படுவது, “திருவடிப் புகழ்ச்சி” என்ற பெயருடையது; 192 சீர்களையுடைய கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகிய நெடிய பாடல்.