பக்கம்:திருவருட்பாவில் பெரும்பொருட் குவியல்-திருமணவிழா மலர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

“திருவருட்பாவில் பெரும் பொருட்குவியல்” என்ற பொதுத் தலைப்பில், திருவருட்பாவில் கண்ட அரிய செய்திகளைக் கட்டுரை வடிவில் அமைத்து எழுத முற்பட்டு, முதலாவதாகத் திருவருட்பா மூன்றாம் திருமுறை இரண்டாவது நூல் 417 கண்ணிகள் கொண்ட “விண்ணப்பக் கலிவெண்பா” என்னும் செஞ்சொற் பாமலரைப் பற்றி ஆய்வு எழுதிப் பெங்களூர் அன்பர், செந்தமிழ்ச் செல்வர், டாக்டர் ம. வெ. ஜெயராமன் அவர்களுடைய 63ஆம் ஜென்ம நக்ஷத்திர வெளியீடாக 22-5-1990 இல் வெளியிட்டேன்.

அடுத்துத் திருவருட்பா மூன்றாம் திருமுறை ஆறாவது நூல் 232 கட்டளைக் கலித்துறைகளாலாய “திருவருள் முறையீடு”, என்னும் பனுவலைப்பற்றி ஆய்வு எழுதி மேற்குறிப்பிட்ட கல்விக் காவலர் டாக்டர் ம. வெ. ஜெயராமன் அவர்களின் மகள் சௌபாக்கியவதி சுந்தரியின் திருமண விழா மலராக 3-6-1990இல் வெளியிடத் திருவருள் துணை செய்தது.

திருவருட்பா மூன்றாம் திருமுறையில் முதலாவது நூலாகவுள்ளதும், 192 சீர்களைக் கொண்ட கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்துள்ளதுமான ஒரு பெரும்பாடல் ஆகிய “திருவடிப் புகழ்ச்சி” பற்றி இவ்வாய்வு நூல் வெளியிடப் பெறுகிறது. மேற் கொண்டு “சிவநேச வெண்பா, மகாதேவ மாலை” ஆகியவற்றின் ஆய்வுரை தொடரும். திருவருள் துணை செய்க.

என்குடி முழுதாண்டருளும் மணிக்குடித் தோன்றல், பெங்களூர் வள்ளல்,

தர்ம ரக்ஷாமணி, டாக்டர் ம. வெ. ஜெயராமன் M.A., D.Lit., அவர்களின் மணிமிடை, பவளத் திருமலர்க்கரங்களால், எனது ஐந்தாவது மகன் செல்வன் ம. வே. சுவாமிநாதனின் திருமண விழா மலராக, ஆந்திர மாநிலத்தில், ஐதராபாதில், 2-9-1990இல் இந்நூல் வெளியிடப் பெறுகிறது.