பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 159

இறைவா! பிரிவினை விரும்பாத பேருள்ளம் அருள்க!

இறைவா, சாதி, குலம், பிறப்பு எனும் சுழிப்பட்டுத் தடு மாறும் என்னையும் ஆட்கொண்டருளும் தலைவா! ‘ஒன்றே குலம்’ என்பது நான் கற்றது. நான் விரும்புவது -

ஆனால் இந்தப் பொல்லாத உலக அமைப்பு எண்ணற்ற பிரிவினைகளை உண்டாக்கி விட்டது! அந்தப் பிரிவினைகள் என்னைச் சுற்றி இருப்பவர்களிடத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன. அவர்கள் அந்த உணர்வோடு என்னை அணுகுகின்றனர்.

இறைவா, நீயோ எனக்கு நுண்ணுடல் மட்டும்தான் தந்தனை. இந்த மண்ணுலகில் பலரறிய நடமாடும் இந்தப் பருவுடலை எனக்கு என் தந்தையும் தாயும் பெருங்கருண்ை யுடன் தந்தனர். - *

என் பெற்றோருக்கு ஒரு சாதி இருந்தது. குலம் இருந்தது. என் பெற்றோர் குலம், என் குலம் என்பது தவறல்லவே. இந்த அடிப்படையில் பலர் எனக்குச் சுற்ற மெனச் சூழ்ந்து வருகின்றனர்! எனக்கு அறச்சங்கட நிலை! இறைவா, என்ன சொல்கிறாய் சுற்றம் போற்றுதல் தவறன்று,

குலம் தழிஇய வாழ்க்கை நிறையுடையதே. மனித குலத்தினின்றும் பிரிதல் கூடாது. வேற்றுமை கூடாது. அப்படியா, இறைவா, எனக்கு வேற்றுமையற்ற ஒருகுல உணர்வைக் கொடு. பிரிவினைகளை விரும்பாத பேருள் ளத்தினை அருள் செய்க!

மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்துப் பிரிவுடன் கூடி வாழும் அருள் நெஞ்சத்தினை வழங்குக.

நான் பிறந்து வளர்ந்த சுற்றந்தழிஇ நின்று பேணும் பெருவாழ்வை அருள் செய்க!