பக்கம்:திருவருட் பயன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



78

ஆன்மாவை அறியாதிருத்தலும் இயல்பே. அவைபோலன்றித் திருவருளையே தமக்கு ஆதாரமாகக்கொண்டு வாழும் உயிர்கள், அத்திருவருளை அறியாதிருத்தல் எவ்வாறு? என மீண்டும் வினவிய மாணாக்கரைநோக்கி மற்றோர் எடுத்துக் காட்டுத்தந்து விளக்குவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

      36. தரையை யறியாது தாமே திரிவார்
          புரையை யுணரா புவி.

இ-ள்: பூமியைத் தமக்கு ஆதாரமென்றறியச் செய்யாது, தாமே தமக்கு ஆதாரமாகப் போக்குவரவு செய்வாரைப்போல், அருளினைத் தமக்கு ஆதாரமென்றறியா; உயிர்களும் என்க.

புவி என்பது, ஈண்டு உயிர்கள்மேல் நின்றது.

விளக்கம்: ஆன்மாக்கள் தமக்குப் பற்றுக்கோடகிய திருவருளை அறியாமைக்கு மக்களது அனுபவத்தில் வைத்து ஒர் எடுத்துக்காட்டுத்தந்து விளக்குகின்றது.

தரையை (தமக்கு ஆதாரம் என்று) அறியாது தாமே (தமக்கு ஆதாரம் எண்ணித்) திரிவாரைப்போல், புவியும், புரையை உணரா என வேண்டும் சொற்பெய்து விரித்துப் பொருள்கொள்க.

தரை என்றது நிலமாகிய இடத்தையும், புவி என்றது பூமியில்வாழும் உயிர்தொகுதிகளையும் உணர்த்தி நின்றன. உயர்பு என்னும் பொருளுடைய புரை என்னும் உரிச்சொல், எல்லாவற்றுக்கும் மேலாய் உயர்ந்ததாகிய திருவருளைக் குறித்தது. 'புரையுயர்பாகும்' (உரி-4) என்பது தொல்காப்பியம்.