பக்கம்:திருவருட் பயன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



79

நிலத்திற் போக்குவரவு புரிவோர், தம் செயல் நிகழ்ச்சிக்கு ஆதாரமாய் விளங்குவது பூமி என்னும் உணர்ச்சியின்றித் தம்முடைய சாமர்த்தியத்தினால் நடப்பதாக நினைத்துத் திரியுமாறுபோல, ஆன்மாக்களும் தமக்குத் தாரகமாவது திருவருள் என்னும் உண்மையினை உணராது தாமே எல்லாம் அறிந்து செய்வதாக எண்ணுகின்றன என்றவாறு.

அருள் என்பது, உயிர்க்கு ஆதாரமாயிருப்பின் அதனை ஆன்மாவாகிய யானே தேடி அறிவேன் என்பாரை நோக்கி, அத்திருவருள் உனக்குப்புறம்பாக உன்னால் தேடிக்காணத் தக்க எளிமையுடைய ஏகதேசப் பொருளன்று என அறிவுறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும்.

     37. மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெடுத்தோர் 
                                                          ஞானந் 
         தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். 

இ-ள்: மலையினை யிழந்தோரும், மண்ணினை யிழந்தோறும், ஆகாயத்தினை யிழந்தோறும், எங்கணும் நிறைந்த பேரறிவினை யிழந்தோரும் தம்மில் தாம் ஒப்பர் என்க.

மலை நிலம் ஆகாயம் தான் என்பவற்றைக் கெடுத்தோர் உலகின்கண் இல்லை. உளராயின், அவர்போல அருளினை யிழந்தோரும் பேதையர் என்பதாம்.

ஈண்டுத் தற்கேடர் என்பது யாக்கைமேல் நின்றது.

விளக்கம்: அருளிடமாக வாழும் ஆன்மாக்கள் அருள் எங்கே என்று புறத்தே தேடியறிய முயல்வது, தான் எங்கே என்று தன்னைத்தேட முயலும் பித்தர் செயலோடொக்கும் என்பது உணர்த்துகின்றது.