பக்கம்:திருவருட் பயன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தத்துவநாதர் என்பார், துகளறுபோதம் என்னும் நூலை இயற்றிய சீகாழிச் சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர் என்றும் ஆராய்ச்சியறிஞர் எஸ். அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் எழுதியுள்ளார்கள்.

சித்தாந்த சாத்திரங்களை முதன்முதல் தொகுத்து உரையுடன் அச்சிட்ட கொ.சண்முகசுந்தர முதலியார் அவர்கள் உமாபதிசிவம் அருளியனவாகக் கூறப்படும் எட்டு நூல்களையும் சித்தாந்த அஷ்டகம் என ஒன்றாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். தருமையாதீனத்து வெள்ளியம்பலவானத் தம்பிரான் அவர்கள் தம்காலத்து வழங்கிய தொன்னூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து எழுதிய முத்தி நிச்சயப் பேருரையில் உண்மைநெறி விளக்கம் என்னும் இந்நூலை உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாசம் முதல் சங்கற்பநிராகரணம் ஈறாகவுள்ள நூல்களின் நடுவே ஐந்தாவதாகக் குறித்திருப்பதுடன் இவ்வுண்மைநெறி விளக்கத்திற்குச் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் ஓர் உரை இயற்றியுள்ளார் என்ற செய்தியையும் தெளிவாகக் குறித்துள்ளார்.

"ஏக காலத்தின் அறுபத்துமூன்று திருப்பெயருக்குச் சாம்பவதீக்கையான் சத்தியோ நிர்வாணதானம் பண்ணித் தாமும் சமாதியிருந்து சிவகதியடையும் பெருமையுடைய சிற்றம்பலநாடிப் பண்டாரத்தான் உரையெழுதப்பட்ட உண்மை நெறி விளக்கம்" (முத்தி நிச்சயப் பேருரை=பக்கம் 257, 258,) என வெள்ளியம்பலவாண முனிவர் இந்நூலைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுதலால் உண்மைநெறி விளக்கமாகிய இந்நூல் சீகாழிச் சிற்றம்பல நாடிகளுக்குக் காலத்தால் முற்பட்ட தொன்னுால் என்பதும், அதனை அவரியற்றிய துகளறுபோதத்தின் வழிநூலெனக் கூறுதல் பிழையென்பதும் நன்கு துணியப்படும் அன்றியும் அறிஞர் அனவரதவிநாயகம் பிள்ளையவர்களிடத்துள்ள உண்மைநெறி விளக்க உரைப் பிரதியாகிய ஒலைச்சுவடியொன்றில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/17&oldid=513148" இலிருந்து மீள்விக்கப்பட்டது