பக்கம்:திருவருட் பயன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

அணு அண்டத்து நின்றுநுணங்கிய தண்டாச்சீர்த்தி' எனவும் அருளிச் செய்தவாறு காண்க. குவ்வுருபு மூன்றாம் வேற்றுமைப் பொருள் தந்தது; 'யாதனுருபிற் கூறிற்றாயினும், பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்’ (தொல் - வேற்றுமை மயங்கியல் 28) என்பது இலக்கண மாகலின்.

இதனால், இறைவனது உயர்வு கூறப்பட்டது.

விளக்கம் : இஃது, ஒருவாற்றானும் தனக்கு ஒப்பில்லாதவன் இறைவன் என்பது உணர்த்துகின்றது.

மிகப்பெரிய அண்டங்கள் யாவும் தன்வியாபகத்துள் அடங்கத் தான் அவையெல்லாவற்றையும் கடந்து மேலாக விரிந்து நிற்கும் பெருமையினாலும், மிகமிகச்சிறிய அணுத் தோறும் ஊடுருவி யாண்டும் நீக்கமறக் கலந்துநிற்கும் நுண்மையினாலும், உயிர் தோறும் உயிர்க்குயிராய்நின்று அருள் சுரக்கும் பெருங்கருணைத் திறத்தினாலும், உயிர்களின் முயற்சியாற் சென்றடைய முடியாத திருவாகிய வீடுபேற்றின்பத்தினை உயிர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டு நின்று வழங்கும் அருமைத்திறத்தினாலும் தன்னை ஒப்பார் ஒருவரும் இல்லாத தனிமுதல்வன் இறைவன் என்றவாறு.

தன்னை ஒப்பார் எவரும் இல்லாதவன் எனவே தன்னின் மிக்கார் ஒருவரும் இல்லாதவன் என்பது தானே விளங்கும். இது,

   தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
   மனக்கவலை மாற்ற லரிது’ (கடவுள் வாழ்த்து-7)

எனவரும் திருக்குறளுக்கு விளக்கவுரை போன்று அமைந்திருத்தல் காணலாம். ஒரு பொருட்குக்கூறும் உவமையினை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/34&oldid=513361" இலிருந்து மீள்விக்கப்பட்டது